மும்பை: ‘‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில், நாடு முழு வீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளது’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதமாக கூறினார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10-ம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டு காலங்களில் நிகழ்த்திய மாற்றங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி, 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் நேற்று ‘ரிப்போர்ட் கார்டு’ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவீச்சில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடு முழுவதும் 220 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டது. நாட்டின் மதிப்பை கடந்த 9 ஆண்டுகளில் உலகளவில் நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். ஏழை மக்கள் கவுரவத்துடன் உணவு பாதுகாப்பை பெற்றுள்ளனர். அதே போல் கடந்த 9 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் இந்தியாவை போல் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை.
நாட்டில் 12 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 9.60 கோடி பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும், ஏழை மக்களுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழைகளுக்கு 3.50 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஏழைகளுக்காக 12 கோடி கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புறநகர் பகுதிகளில் 100 சதவீத கழிவறை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வெறும் 39 சதவீதமாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நாடு முழு வீச்சில் முன்னேற்றம் கண்டு வருவதுடன், உலகளவில் இந்தியாவின் அந்தஸ்தும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.