டெல்லியில் மைனர் சிறுமியை 20 முறை கத்தியால் குத்தியும், பாறாங்கல்லைப் போட்டும் கொடூரமாகக் கொன்ற இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி, ரோஹினி ஷஹபாத் குடிசைப்பகுதியில் 16 வயது சிறுமியின் வீட்டிற்கு வெளியிலேயே, இளைஞர் ஒருவர் சிறுமியைத் தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்டும் காணாமல் சாலையில் மக்கள் கடந்து சென்றுள்ளனர்.
சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமியும் சாஹிலும் பழகியதாகவும், சம்பவத்திற்கு முந்தைய நாள் இவர்களுக்குள் சண்டை நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சிறுமி சென்றபோது, அவரை மறித்து பலமுறை கத்தியால் குத்தி இருக்கிறார் சாஹில்.
தாக்கிய சாஹிலுக்கு வயது 20 என்றும், ஃபிரிட்ஜ் மற்றும் ஏசி- களை பழுது பார்க்கும் மெக்கானிக் எனவும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி இருந்தார். இவர் மீது காவல் துறையினர் இந்தியத் தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தலைமறைவான சாஹிலை காவல் துறையினர் நேற்று உத்தரப்பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
“சாஹில் குறித்து என் மகள் எதையும் கூறியதில்லை. அவர் எதற்காகக் கொலை செய்தார் என்று தெரியவில்லை. சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மட்டுமே அவர் என் மகளை எப்படி, ஏன் கொன்றார் என்பதை வெளிப்படுத்த முடியும். இந்த இளைஞரை தூக்கில் இட வேண்டும்’’ என்று சிறுமியின் தாய் கூறியுள்ளார்.