கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில் கடந்த 26-ம் தேதி சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை, தி.மு.க – வினர் தடுத்து நிறுத்தியதால், அதிகாரிகளால் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு, அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அங்கு சோதனைக்கு வந்த காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை தி.மு.க-வினர் தாக்கியதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த அதிகாரிகளும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பெண் அதிகாரி தன்னை தாக்கியதாக, தி.மு.க தொண்டர் குமார் என்பவர், புகார் தெரிவித்தார். இந்நிலையில், அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், இரண்டு கரூர் மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டவர்கள் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதோடு, அசோக் குமாருக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐந்தாவது நாளான இன்றும் சோதனையை தொடங்கிய அதிகாரிகள், ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள அசோக் குமார் அலுவலகமான அப்பெக்ஸ் இன்பக்ஸ்-ல் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள அசோக் குமார் வீட்டில், சென்னை வருமான வரித்துறை உதவி இயக்குநர் நாகராஜ் அனுப்பிய சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், ‘இன்று காலை 10:30 மணிக்குள் அவரோ அல்லது அவர் சார்பாக பிரதிநிதி ஒருவரோ சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித்துறை பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அசோக் குமாரின் ஆடிட்டர் ஒருவர் ஆஜராகி கால அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.