கர்நாடகாவில்
காங்கிரஸ்
ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டது. ஒருவழியாக உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர். தங்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் போதிய எண்ணிக்கையில் இடமளித்துள்ளனர். தற்போது 34 அமைச்சர்கள் பதவியேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
துறைகள் ஒதுக்கீடு
அதில் முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதி, அமைச்சரவை விவகாரங்கள், நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை துறைகள் ஒதுக்கப்பட்டன. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பாசன வசதி, பெங்களூரு நகர மேம்பாடு (BBMP, BDA, BWSSB, BMRDA, BMRCL) ஆகியவை அடங்கும். இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக
ஏனெனில் இவர்கள் அனைவரும் கடந்த பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். பலர் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. எனவே யாருக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருக்கிறது? யாரெல்லாம் கடந்த பாஜக ஆட்சியில் சலுகைகள் பெற்றார்கள்? எனக் கண்டறிந்து அனைவரையும் ஓரங்கட்ட முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
ரெட் லிஸ்ட்
இதுதொடர்பான பிரத்யேக பட்டியலை தயாரிக்கும் பணியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் ஆகியவற்றின் பரிந்துரையால் நிதி, நகர்ப்புற மேலாண்மை, BBMP, BDA மற்றும் ஆதாயம் கிடைக்கக் கூடிய பல்வேறு துறைகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகள்
இவர்களை சரியாக அடையாளம் காணும் பணிகள் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உள்துறையை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம். காவல்துறை, உளவுத்துறை உள்ளிட்டவை உள்துறை அமைச்சகத்தின் கீழ் தான் வருகின்றன. சட்டம், ஒழுங்கு விஷயம் சரியாக இருந்தால் தான் ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.
டிஜிபி vs டிகே சிவக்குமார்
இதில் கோட்டை விட்டு விட்டால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதற்கேற்ப அதிகாரிகளை நியமிக்க காய் நகர்த்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த ஆட்சியில் கர்நாடகா டிஜிபியாக இருந்த பிரவீன் சூட் மற்றும் டிகே சிவக்குமார் இடையிலான மோதலை வெளிப்படையாக பார்க்க முடிந்தது. சரியாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டை மாற்றி மத்திய அரசு அதிரடி காட்டியது.
டிகே சிவக்குமாருக்கு சிக்கல்
டெல்லியில் இருந்து டிகே சிவக்குமாருக்கு குடைச்சல் கொடுக்கும் வியூகமாக இருக்கலாம் என்கிறது அரசியல் வட்டாரம். இதேபோல் கல்வித்துறையிலும் சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் புதிய கல்வி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு ஏதுவாக யாரும் செயல்பட்டு விடக் கூடாது.
தமிழக சர்ச்சை
சமீபத்தில் கூட சித்தராமையா பேசுகையில், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியிருந்தார். தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை உருவாக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த ஜவஹர் நேசன் வெளியேறி, உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது கவனிக்கத்தக்கது.