டெல்லி சிறுமி கொலை.. எக்ஸுடன் சேர்ந்து மிரட்டியதால் கொன்றேன்.. இளைஞன் அளித்த பகீர் வாக்குமூலம்

டெல்லி:
டெல்லியில் 16 வயது சிறுமி நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை கொன்ற இளைஞன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். முன்னாள் காதலனுடன் சேர்ந்து தன்னை மிரட்டியதால் அவளை கொலை செய்ததாக அவன் போலீஸாரிடம் கூறியுள்ளான்.

டெல்லியின் ஷாஹ்பாத் டெய்ரி பகுதியில் ஒரு 16 வயது சிறுமியும், 20 வயது மதிக்கத்தக்க இளைஞனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியின் உடலில் சரமாரியாக குத்தினான். தலை, முகம், இதயம், வயிறு என பல இடங்களில் 20-க்கும் மேற்பட்ட கத்திக்குத்துகள் சிறுமிக்கு விழுந்தன.

இதில் அந்தப் பகுதி முழுவதும் ரத்தம் தெறித்த நிலையில், அங்கேயே அந்த சிறுமி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த இளைஞன் அங்கிருந்து சர்வசாதாரணமாக சென்று ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அந்த சிறுமி மீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பினான்.

துடிக்க துடிக்க கொலை:
இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி துடிதுடித்து உயிரிழந்தார். அத்தனைக்கும் இச்சம்பவம் நடைபெற்ற போது அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் கூட அந்த சிறுமியை காப்பாற்ற முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகீர் வாக்குமூலம்:
இதனைத் தொடர்ந்து, கொலையாளியை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவன் போலீஸில் பிடிபட்டான். விசாரணையில், அவனது பெயர் ஷாகில் (20) என்பதும், ஏசி பழுதுபார்க்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அவனை விசாரித்த போலீஸார் மிரண்டு போயுள்ளனர்.ஏனெனில் இவ்வளவு கொடூரமாக ஒரு சிறுமியை கொலை செய்த எந்த வருத்தமும், குற்ற உணர்வும் அவனிடம் இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

எக்ஸுடன் சேர்ந்து சுற்றினாள்:
இதுகுறித்து போலீஸிடம் அவன் அளித்த வாக்குமூலத்தில், “நானும், அவளும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவளுக்காக எவ்வளவோ செலவு செய்தேன். அவள்தான் என் வாழ்க்கை என நினைத்தேன். ஆனால் சில மாதங்களாக அவளது போக்கில் மாற்றம் தெரிந்தது. அவளுக்கு தெரியாமல் இதுகுறித்து விசாரித்தபோது தான், அவளது முன்னாள் காதலனான ஜாகீருடன் சேர்ந்து பல இடங்களில் சுற்றுவது தெரியவந்தது. இது பற்றி நான் கேட்ட போது, இனி நமது உறவை பிரேக் அப் செய்து கொள்ளலாம் என அவள் கூறினாள்.

பழிதீர்க்க கொலை செய்தேன்:
ஆனால், என்னால் அவளை மறக்க முடியவில்லை. இதனால் அவளிடம் சென்று மீண்டும் மீண்டும் பேசினேன். இதையடுத்து, அவளது முன்னாள் காதலன் ஜாகீருடன் சேர்ந்து அவள் என்னை மிரட்டினாள். இனி அவளை பின்தொடர்ந்தால் என்னை கொன்றுவிடுவேன் என ஜாகீர் என்னிடம் கூறினான். என் காதலிக்கு முன்பே அவன் இப்படி கூறியதால் நான் அவமானம் அடைந்தேன். இதற்கு பழிதீர்ப்பதற்காகவே அவளை கொலை செய்தேன். அவளை கொன்றதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை” என்றான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.