மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. 8 ஏவுகணைகள் மாஸ்கோவை தாக்கின. எனினும் நாங்க அந்தத் தாக்குதலை இடைமறித்தோம். பல கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தது.
ஆனால், “நாங்கள் வான்வழி தாக்குதலை நடத்தவில்லை. எனினும், இம்மாதிரியான தாக்குதல் மகிழ்ச்சி தருகிறது” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. முன்னதாக, 30 வான்வழித் தாக்குதல் மாஸ்கோவில் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதே நேரத்தில் உக்ரைன் தலை நகர் கீவ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவோ என்று தலைவர்களும் உறுதியளித்தன. இந்தச் சந்திப்பை தொடர்ந்து உக்ரைனில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.