ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சி.எஸ்.கே அணிக்கு ரூ.20 கோடி ரூபா பணப்பரிசு

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய மதிப்பின்படி 20 கோடி ரூபா பணப்பரிசை பெற்றுள்ளது.

நேற்று (29) இரவு அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்றது.

இவ்வணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்தில் 96 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 6 சிக்சர் ), விர்த்திமான் சஹா 39 பந்தில் 54 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 20 பந்தில் 39 ஓட்டங்களும் (7 பவுண்டரி) எடுத்தனர்.
பத்திரன 2 விக்கெட்டும், ஜடேஜா, தீபக்சாஹர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதன்பி;னர் 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்தார். அதோடு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

மழையால் ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரமாக இருந்தது. இதனால் போட்டியை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக சி.எஸ்.கே.வுக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கமைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். கான்வே 25 பந்தில் 47 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 21 பந்தில் 32 ஓட்டங்களும் (2 சிக்சர்), ரகானே 13 பந்தில் 27 ஓட்டங்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்தில் 26 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அம்பதி ராயுடு 8 பந்தில் 19 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா 6 பந்தில் 15 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

இதேவேளை 10ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. இதில் 5 முறை சாம்பியன் என்பது அபாரமான ஒன்றாகும். மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கிண்ணத்தை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது. ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இதை வழங்கினார்கள்.

2ஆவது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.13 கோடி கிடைத்தது. 3ஆவது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4ஆவது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக இந்திய மதிப்பின்படி ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.