ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய சென்னையைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி திட்டமிட்டிருந்தார்.
அதற்காக முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை முன்னரே வழங்கியிருந்தார். இந்த நிலையில், முத்தமிழ்ச் செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோர் இருவரும் எவரெஸ்ட் ஏறிட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்கள் நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
அதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு; உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த என். முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோர் இன்று (30.05.2023) சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோரைப் பாராட்டி, இதுபோன்று மென்மேலும் பல சாதனைகளை படைத்திட வாழ்த்து தெரிவித்தார். மேலும், விளையாட்டுத் துறையில் இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சார்ந்த முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த முதல் பெண் ஆவார். மே- 23ஆம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். முத்தமிழ்ச் செல்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை 28.03.2023 அன்று வழங்கப்பட்டது. மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
மேலும், சென்னை கோவளம், மீனவ கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் பச்சை (வயது 28) அவர்களும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான (surfing player) இவர் சென்னை-படூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி (B.C.A) பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் மே 19ஆம் தேதி
காலை 5.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி, அலைசறுக்கு சங்க மாநில துணைத் தலைவர் வீரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் திருமதி மெரிசி ரெஜினா, முதுநிலை மண்டல மேலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.