இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும் வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், ஒலிம்பிக் பதக்கம் உட்பட தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்குத் தயாராகும் விதமாக, பதக்கங்களைப் பையில் எடுத்துவைக்கும் வீடியோ வெளியானது. இந்த நிலையில் ஹரித்வாரிலுள்ள கங்கை நதிக்கரைக்கு பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் ஆகியோர் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச வந்தனர்.
ஆனால் மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். விவசாய சங்கத் தலைவர்கள் பலரும் பதக்கங்களை கங்கையில் வீசவேண்டாம் என சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால், அடுத்த ஐந்து நாள்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நிச்சயமாகப் பதக்கங்களை ஆற்றில் வீசலாம் என்று சமாதானப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொருபக்கம், இந்தியா கேட்டிலும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாகத் தகவல் வெளியாகிருகிறது. இது தொடர்பாக, `இந்தியா கேட் போராட்டத்துக்கான இடமல்ல. மல்யுத்த வீராங்கனைகள் அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்படாது’ என டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.