கரூர்:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது அவரது சகோதரர் அசோக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைக்குள் அவர் ஆஜராக வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. முதல்வர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவராக அறியப்படுகிறார். அதிமுகவில் இருந்து வந்த போதிலும், அவருக்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் ஆகிய பதவிகளை கொடுத்து ஸ்டாலின் அழகு பார்த்து வருகிறார்.
ஈரோடு, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்கள் செந்தில் பாலாஜியின் கன்ட்ரோலில் தான் விடப்பட்டிருக்கின்றன. எந்த விஷயமாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பவர் என்ற பெயரும் செந்தில் பாலாஜிக்கு உண்டு. இதனால்தான் அவர் முதல்வரின் குட் புக்கில் இடம்பெற்றிருக்கிறார்.
கட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி:
இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருந்த செந்தில் பாலாஜியின் பயணத்தில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீசி வருகிறது. இவை திமுக ஆட்சியையே அசைத்து பார்க்கும் அளவுக்கு சென்றுள்ளது. கரூரில் அரண்மணை போல வீடு, கள்ளச்சாராய மரணங்கள், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி என அவரை சுற்றி சர்ச்சைகளும், வழக்குகளும் வட்டமடிக்க தொடங்கியுள்ளன.
அதிரடி ரெய்டு:
இதன் தொடர்ச்சியாகவே, செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கடந்த 4 தினங்களுக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திமுக மேலிடம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர்கள் அமைதியாகினர்.
சகோதரருக்கு சம்மன்:
கரூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவக்கின்றன. இந்த சூழலில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் சின்ன ஆண்டாங் கோயிலில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றைக்குள் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கு சம்மன்?
அசோக் குமார் தான் செந்தில் பாலாஜியின் கணக்கு வழக்குகளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் டெண்டர்கள், மின்சார டெண்டர்கள் ஆகியவற்றிலும் அசோக் குமார் டீலிங் செய்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.