காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணல் கொள்ளை மற்றும் அரசியல்வாதிகளால் இந்த ஆட்சியில் அக்கப்போரு என திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை ஒரு கும்பல் தாக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் தமிழரசன், மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மணல் கொள்ளைகள் மற்றும் அரசியல்வாதிகளால் இந்த ஆட்சியில் அக்கப்போரு என திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்து கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் குறித்து மாநிலச் செயலாளர் தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணல் கடத்தல் தடுப்பு பணிக்கு செல்லும் வருவாய்த்துறையினருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். தற்போது திருச்சி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார்.
கனிமவள கொள்ளையர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.