மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக எந்தவொரு படத்தையும் இயக்காமல் அப்படியே பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்குமா? என காத்திருக்கிறார்.
விஜய்யை வைத்து துப்பாக்கி 2வை இயக்குவார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், விஜய் மீண்டும் முருகதாஸ் உடன் இணைய சம்மதம் தெரிவிக்கவில்லை.
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் பிசியாக உள்ள சிவகார்த்திகேயன் இப்போதைக்கு ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணையப் போவதில்லை என்றே கூறுகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் பாலிவுட் பக்கமே படையெடுத்துள்ள முருகதாஸுக்கு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
அட்லீக்கு முன்னாடியே: கோலிவுட் இயக்குநர்களுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ பிரம்மாண்டமாக இயக்கி உள்ளார். இந்த ஆண்டு அந்த படம் வெளியாக உள்ளது.
அட்லீக்கு முன்னதாகவே பாலிவுட்டில் முன்னணி நடிகரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி உள்ளார்.
அமீர்கானை வைத்து: தமிழில் சூர்யாவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்தவர் ஏ.ஆர். முருகதாஸ்.
அமீர்கானின் கஜினி படத்தின் வசூலை பார்த்து விட்டு ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனே காப்பி கதைக்கு இவ்வளவு வசூலா? எனக் கேட்டதாக அப்போது ட்ரோல்கள் வெளியாகின.
சல்மான் கானை இயக்குகிறாரா?” அமீர்கானின் கஜினி படத்தை முடித்த கையோடு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கான் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.
ஆனால், அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு தமிழில் துப்பாக்கி, கத்தி என பிசியானதால் மிஸ் ஆனது என்கின்றனர். இந்நிலையில், மீண்டும் சல்மான் கானை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுத் பக்கம் திரும்பிய சல்மான் கான்: சல்மான் கான் மட்டுமின்றி பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்கள் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து உருவாகி வருகின்றன. அதே போல தென்னிந்திய இயக்குநர்களும் குறிப்பாக தமிழ் இயக்குநர்களும் பல பாலிவுட் நடிகர்களின் படங்களை இயக்கி வருகின்றனர்.
வீரம் படத்தை ரீமேக் செய்து சமீபத்தில் நடித்த சல்மான் கான், பிரபுதேவாவுக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை முன்னதாக கொடுத்திருந்தார். இந்நிலையில், டைகர் 3 படத்துக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணையப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.