புதுடில்லி :’பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள், சட்டப்பிரிவு 32ன் கீழ் மனு தாக்கல் செய்து, தங்கள் மீதான நடவடிக்கைகளில் இருந்து தப்ப முயலும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது.
சத்தீஸ்கரில், மதுபான ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சில குற்றவாளிகள் மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளான சிலர், தங்கள் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தனிநபர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உணர்ந்தால், நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையை அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவு வழங்குகிறது. இந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இப்படி சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர் ஒருவர், ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதால், மனுவை திரும்பப் பெற நேற்று அனுமதி கோரினார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”பணப் பரிமாற்ற மோசடி வழக்கு குற்றவாளி கள், முன் ஜாமின் கோருவதற்கு மாற்றாக, சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை எதிர்த்து மனு தாக்கல் செய்து, நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் புதிய போக்கு அதிகரித்து வருகிறது. இது, உண்மையில் முன்ஜாமின் பெறுவதற்கு சமமாகும்,” என, வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், ”பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள், சட்டப்பிரிவு 32ன் கீழ் மனு தாக்கல் செய்து, தங்கள் மீதான நடவடிக்கைகளில் இருந்து தப்ப முயலும் போக்கை நிராகரிக்க வேண்டும்,” என, தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement