சென்னை: “2009-ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: “மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வருகின்ற ஜூன் 3ம் தேதி முதல் ஓராண்டு காலம் சிறப்பாக நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கவும், நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருமாறும், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டு வருகை தர உள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தது முதல் கருணாநிதி காட்டிய வழியில் ஆட்சி நடக்கிறது என்பதை முதல்வர் தொடர்ந்து பெருமையாக தெரிவித்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில், கிழக்கு கடற்கரை சாலைக்கும், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிக்கும் அவரது பெயர், அவரின் கடிதங்களை தொகுத்து நூல்களாக வெளியிடுதல், அவரின் பேனாவுக்கு சிலை வைத்தல், கிண்டி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவரது பெயர், மதுரையில் அவரது பெயரில் நூலகம் என தொடர்ந்து தமிழகத்தில் கருணாநிதியின் பெயர் பேசப்படும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார்.
இருப்பினும் 2009ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவர்களுக்கு DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு கிடைத்திடும் வகையில், அரசாணை 354-ஐ கருணாநிதி வெளியிட்டார். இருப்பினும் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், என்ன காரணத்திற்காக கருணாநிதி வெளியிட்டாரோ, அதற்கான பலன்கள் மருத்துவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மட்டும் மனதில் வைத்து, ஊதிய உயர்வுக்கான அரசாணையை அன்று கருணாநிதி வெளியிடவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் வெளியிடப்பட்டது. பெரும்பாலான மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகள்தான் என்ற நிலையில், இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க, தங்கள் பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தை தருவதன் மூலம், இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் அன்று அரசாணையை வெளியிட்டார்.
ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகிறோம். குறிப்பாக 2019-ம் ஆண்டு போராட்டத்தின் போது 118 அரசு மருத்துவர்கள் (40 பெண் மருத்துவர்கள்) 500 கி.மீட்டருக்கு அப்பால் இடம் மாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்தார். மேலும் அன்று மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மன உளைச்சலால் உயிரிழந்தபோது, உடனடியாக இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த அன்றைய எதிர்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக அரசை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்ததை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
மேலும் 2019ம் ஆண்டு போராட்டத்தின்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நம் முதல்வர், அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை.
இரண்டு வருடங்களாகவே கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, முதல்வரின் பிறந்த நாளான பிப்ரவரி 1ம் தேதி, டாக்டர்கள் தினமான ஜூலை 1, தீபாவளி பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு என்ற வகையில் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
இரண்டு வருடங்களாக தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை, பட்ஜெட் அறிவிப்பு மற்றும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை என முக்கிய தருணங்களில் மருத்துவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். அதுவும் கடந்த ஆண்டு துறை மானியக் கோரிக்கையின் போது, டாக்டர் எழிலன் மற்றும் சின்னத்துரையும், இந்த ஆண்டு சிந்தனை செல்வன் மற்றும் MR.காந்தியும் அரசாணை 354-ஐ அமுல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். அதாவது ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியும் இன்னமும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது இருந்த அசாதாரண சூழ்நிலையில், உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்றால் அரசு மருத்துவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். இருப்பினும் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்று வரை முதல்வரின் கடைக்கண் பார்வை விழாமல் இருப்பது, அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த வேதனையையும், வலியையும் ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, ஜனநாயக வழியில் போராடும் மருத்துவர்களுக்கு 17 (பி) குற்றக் குறிப்பாணை தரப்பட்டுள்ளது மட்டுமன்றி, தண்டனை பணியிட மாற்றம் செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது மருத்துவர்கள் தண்டிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி ஆணையை அமுல்படுத்த கேட்டதற்காக, திமுக ஆட்சியிலும் தண்டிப்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
கடந்த ஆண்டு முதல்வரின் சுதந்திர தின உரையின் போது, இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனின் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தி தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அரசு மருத்துவர்கள் தங்கள் சம்பளத்திற்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது தான் வருத்தமான உண்மை.
கடந்த டிசம்பர் 28ம் தேதி மு.கருணாநிதி வரலாறு என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், தான் இல்லாத பிறகும், தான் என்றும் நினைக்கப்பட வேண்டும் என்பது தான் கருணாநிதி விரும்பிய வாழ்க்கையாக இருக்கக் கூடியது என தெரிவித்தார். அந்த வகையில் தற்போது கருணாநிதியின் ஆணையை அமுல்படுத்தினால் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் என்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பார்கள்.
அதுவும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பது பெருமைக்குரிய விசயம். இந்த நேரத்தில் நம் முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்துவதோடு, கருணாநிதியின் நூற்றாண்டு விழா என்றுமே மறக்க முடியாததாகவும், அவரை பெருமைப்படுத்துவதாகவும் அமையும். மேலும் போராடியதற்காக தரப்பட்ட தண்டனைகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.