தருமபுரி மாவட்ட நகர்ப் பகுதியில், கலெக்டர் பங்களாவுக்கு அருகே, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர், 2 ஏக்கருக்கு மேல் திறந்தவெளி நெல் கிடங்கு அமைத்திருக்கின்றனர். இங்கு, டெல்டா மாவட்ட விவசாயிகளிடம், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கொள்முதல் செய்யும் நெல்லை இருப்பு வைத்து, அரவை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவருகின்றனர்.
இப்படியான நிலையில், சென்னை நுகர்பொருள் வாணிபக்கழக விஜிலென்ஸ் பிரிவுக்கு, ‘திறந்தவெளி நெல் கிடங்கில், ரூ.14 கோடி மதிப்பிலான 7,000 டன் நெல் மாயமாகிவிட்டது’ எனப் புகார் வந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுசெய்த விஜிலென்ஸ் அதிகாரிகள், ‘கள ஆய்வு செய்ததில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்ட 7,000 டன் நெல் மூட்டைகள் கணக்கில் வரவில்லை, மாயமாகியிருக்கின்றன’ என அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கின்றனர்.
‘‘சர்க்கரையை எறும்பு தின்றது…’’
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், ‘‘ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்குப் பரிசளித்து வரும் இந்த விடியா தி.மு.க ஆட்சியில், தற்போது, தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகிவிட்டதாகச் செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7,000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7,000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’’ எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
‘உண்மை என்னவென்று தெரியவரும்!’
இது குறித்து நாம் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் கேட்டபோது, ‘‘டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததால், அங்கிருந்து தருமபுரிக்குக் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள், திறந்தவெளி கிடங்கில் முறையாக அடுக்கப்படாமல், தாறுமாறாக அடுக்கப்பட்டிருக்கின்றன. விஜிலென்ஸ் பிரிவு ஆய்வுசெய்து, 7,000 டன் நெல் மூட்டைகளைக் காணவில்லை எனக் கூறியிருக்கிறது.
முறையாக மூட்டைகள் அடுக்கப்படாததால், அவர்களால் முறையாக எண்ணிக்கை செய்ய முடியாமல் போனதா எனத் தெரியவில்லை. நாளை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவிருக்கிறேன். மொத்தமாக, 3.77 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், 1.5 லட்சம் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. வரும், 10 நாள்களுக்குள் மீதமுள்ள மூட்டைகளை அரவை குடோனுக்கு மாற்றியதும், உண்மை என்னவென்று தெரியவரும்’’ என்றார், விரிவாக.
‘கணக்கெடுத்துட்டு இருக்கோம்…’
இது குறித்து, தருமபுரி நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளர் ராஜேந்திரன் நம்மிடம், ‘‘சார்… இப்பதான் மூட்டைகள கணக்கெடுத்துட்டு இருக்கோம். ஆய்வு செய்தாதான் எண்ணிக்கை தெரியவரும். எத்தன டன் நெல் இருப்புல இருந்தது, அரவைக்கு எவ்வளவு அனுப்பியிருக்கோம்னு, கணக்கெடுப்பு செய்துட்டு இருக்கோம்’’ என்றார்.