புதுடெல்லி,
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் சீசன் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சஹா ஆகியோரின் அபார பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை விரட்டிய சென்னை அணி 3 பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கிய போது சென்னைக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை வீரர்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனிடையே திடீரென விக்கெட் விழ தொடங்கியதால் அடுத்து களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே வெளியேறியது ரசிகர்களையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கடும் சோகத்தில் யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ஜடேஜா கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சென்னைக்கு கோர்ப்பையை வென்று கொடுத்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவில் பேசிய அவர், “நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு பாராட்டுகள். போட்டி சி.எஸ்.கே அணியின் பிடியில் இருந்து நழுவியது போல் தோன்றியபோதும், அணியை ஐந்தாவது ஐபிஎல் பட்டம் வென்று சாதனை படைப்பதற்கு தனது பங்களிப்பை ஜடேஜா அளித்தார்.
தனிப்பட்ட முறையில், கடந்த சீசனில் அவர் நிறைய சிரமங்களை சந்தித்தார், ஆனால் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டரான அவர் அனைத்து ஏமாற்றங்களையும் பின்னுக்குத் தள்ளினார். குஜராத்தின் மகன், சென்னை அணிக்காக அகமதாபாத்தில் உள்ள ஒரு மைதானத்தில் வெற்றியை பெற்று தந்தார். வேறுயாராலும் இதை சிறப்பாக செய்திருக்க முடியாது” என்று இர்பான் பதான் கூறினார்.