கொப்பலில் படுஜோராக நடந்த மதுவிருந்து; கேன்களில் பிடித்து வினியோகித்தனர்

கொப்பல்:

கர்நாடக சட்டசபை தேர்தலில் கொப்பல் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் கனககிரி தொகுதியில் வெற்றிபெற்ற சிவராஜ் தங்கடகிக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கனககிரி தொகுதியில் மந்திரி சிவராஜ் தங்கடகியின் ஆதரவாளர்கள் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் குடிநீர் கேன்களில் (தலா 25 லிட்டர் கொண்டவை) மதுபானத்தை அடைத்தனர். மேலும் விருந்துக்கு வருவோருக்கு காகித குவளைகளில் கேன்களில் இருந்து தண்ணீரை பிடித்து கொடுப்பதுபோல் மதுபானத்தை பிடித்து கொடுத்து, மேலும் அவர்கள் கேட்கும் உணவு வகைகளையும் கொடுத்தனர். இவ்வாறாக அவர்கள் 6 கேன்களில் மதுபானத்தை நிரப்பி வைத்து வாக்காளர்களுக்கு மதுவிருந்து அளித்தனர். படுஜோராக நடந்த இந்த மதுவிருந்து சிவராஜ் தங்கடகியின் ஆதரவாளரான நூர்ஷாப் கடிகாலா என்பவரின் வீட்டில் வைத்து நடந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி கொப்பல் புறநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.