'வீரன்' மூலம் மீண்டும் 'மீசைய முறுக்கு'வாரா ஹிப்ஹாப் தமிழா ?

தனிப்பட்ட ஹிப் ஹாப் ஆல்பங்களை உருவாக்கி பிரபலமாகி, பின்னர் 2015ல் வெளிவந்த 'ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா என அழைக்கப்படும் ஆதி. அவரது இசையில் வெளிவந்த படங்களில் 'இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கவண், மீசைய முறுக்கு, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், கோமாளி,' ஆகிய படங்கள் முக்கியமான படங்கள்.

2017ல் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படம் மூலம் இயக்குனராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமானார். அப்படம் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. விமர்சன ரீதியாகவும் அதிக ஸ்டார்களைப் பெறவில்லை. அவர் நடித்து கடைசியாக கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'அன்பறிவு' படமும் வரவேற்பைப் பெறவில்லை.

அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'வீரன்' படம் இந்த வாரம் ஜுன் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஒரு 'சூப்பர் ஹீரோ' கதையாக உருவாகியுள்ள இப்படத்தை 'மரகத நாணயம்' பட இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் இது ஒரு சுவாரசியமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் படமான 'மீசைய முறுக்கு' மூலம் வெற்றியைப் பதித்த ஹிப்ஹாப் தமிழா, 'வீரன்' படத்தின் மூலம் வெற்றி பெற்று மீண்டும் 'மீசையை முறுக்குவாரா ?.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.