சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் 321 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிடவும் மற்றும் தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1986-ம் வருட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த மாநில செயல்திட்டம், நிலையான இயக்க நடைமுறைகள் ஆகியவற்றை உருவாக்கி குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுதலில் தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது தவிர சட்ட, அமலாக்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 1.4.2022 முதல் 30.04.2023 வரை 321 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காலத்தில் 224 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, ரூ.48,28,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில், பல்வேறு துறைகளின் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் பல்வேறு துறைகளுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறையை நடத்திட ஆணை பிறப்பித்தது. இதனடிப்படையில், இன்று பல்வேறு துறைகளுடன் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை அமைச்சர் துவக்கி வைத்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.