Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக பொடுகுத் தொல்லை இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வென எதுவுமே கிடையாதா? இந்தப் பிரச்னைக்கு எந்த எண்ணெய் மற்றும் ஷாம்பூ உபயோகிக்க வேண்டும்? தினமும் எண்ணெய் வைத்து ஷாம்பூ குளியல் எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
பொடுகு என்பது பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கிற பிரச்னையாக இருக்கிறது. வெயில் காலத்தில் அது அதிகரிக்கும். ஆனாலும் சென்னை போன்ற வெப்ப பகுதிகளில் அது இயல்பாகவே எப்போதும் பாதிக்கும். வெப்பம் அதிகமான பகுதிகளில் வசிப்போருக்கு வியர்வை அதிகமிருக்கும். அதனால் சருமத் துவாரங்களில் எண்ணெய்ச் சுரப்பும் அதிகரிக்கும், பொடுகுப் பிரச்னை தீவிரமாகும்.
இந்தப் பிரச்னை பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் தலையில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கும்போது அது அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அந்த எண்ணெயைச் சாப்பிட வரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கிருமிகளால் பொடுகுத்தொல்லை வருகிறது.
பொடுகு வந்தால் முகத்தில் பருக்கள், முதுகில் பொரிப்பொரியாக வருவது போன்றவை எல்லாம் சகஜமாக வரும். எனவே இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வு, மண்டைப்பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்வது. வாரத்துக்கு 3 நாள்களாவது தலைக்குக் குளிக்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைக்கலாமா, கூடாதா என்பது இன்று பெரிய விவாதப் பொருளாக இருக்கிறது. எண்ணெயின் வேலை கூந்தலின் நுனிகள் வறண்டு போகாமலிருக்கச் செய்வது மட்டும்தான்.
ராத்திரியே தலையில் எண்ணெய் வைத்து ஊற வைத்து, அடுத்த நாள் குளிப்பது என்பது எண்ணெயோடு வியர்வையும் சேர்ந்துகொண்டு, பொடுகு வர காரணமாகிவிடும். எனவே தலைக்குக் குளிப்பதற்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு முன் தலையில் எண்ணெய் வைத்துவிட்டு உடனே குளித்துவிட வேண்டும்.
அடுத்தது என்ன ஷாம்பூ உபயோகிப்பது என்ற கேள்வி வரும். குளிர்காலம் என்றால் க்ரீம் வடிவிலுள்ள பால் போன்ற ஷாம்பூக்களையும் வெயில் காலத்தில் டிரான்ஸ்பரன்ட்டான ஷாம்பூக்களையும் பயன்படுத்தலாம். வாரத்துக்கு ஒரு நாள் பொடுகு நீக்கும் ஷாம்பூ பயன்படுத்தலாம். பொடுகு இருக்கிறதோ, இல்லையோ, இந்த முறையைப் பின்பற்றினால் பொடுகுத் தொல்லையிலிருந்து விலகி இருக்கலாம்.
இவை தவிர டூ வீலர் ஓட்டுவோர், வொர்க் அவுட் செய்வோரெல்லாம் கூந்தல் பராமரிப்பில் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அடிக்கடி தலைக்குக் குளித்து மண்டைப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.