சென்னை: Chennai Super Kings (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதையடுத்து நடிகை கஸ்தூரியின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், குஜராத் டைட்டன்ஸும் மோதின. கடந்த 28ஆம் தேதி நடக்க வேண்டிய போட்டி மழை காரணமாக 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து, செம ஃபார்மில் இருக்கும் கில்லும், சஹாவும் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் ஜடேஜா ஓவரில் தோனியின் 0.12 நொடி மின்னல் வேக ஸ்டம்ப்பிங்கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சுதர்சனின் பொறுப்பான ஆட்டம்: கில் அவுட்டான பிறகு சஹாவும், தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நிதானமாகவே எதிர்கொண்டது. குறிப்பாக சுதர்சனின் பேட்டிங்கில் அனல் பறந்தது. எனவே குஜராத்தின் ரன் ரேட்டும் சீராக இருந்தது. சஹா 54 ரன்களில் ஆட்டமிழக்க சாய் சுதர்சன் 96 ரன்களில் வெளியேறினார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை எடுத்தது.
சென்னை வெற்றி: 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ருத்துராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் மழை வந்து சோதனை செய்தது. அதனையடுத்து நள்ளிரவு 12.10 மணிக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. ருத்துராஜும், கான்வேவும் டீசண்ட்டான தொடக்கம் கொடுக்க, அம்பத்தி ராயுடுவும், ஜடேஜாவும் அதிரடி காட்ட கடைசி பந்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கொண்டாட்டத்தில் கஸ்தூரி: சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றதை பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் நடிகை கஸ்தூரி சிஎஸ்கே அணி விளையாடிய இறுதிப்போட்டியை குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். அப்போது கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து ஆடினார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
அகமதாபாத் சென்ற பிரபலங்கள்: முன்னதாக இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சதீஷ், நடிகை வரலட்சுமி, ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,அவரது இரண்டு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா அகமதாபாத் சென்றிருந்தனர். சென்றதோடு மட்டுமில்லாமல் சென்னை அணியை உற்சாகப்படுத்தவும் செய்தனர். விக்னேஷ் சிவனோ ஒருபடி மேலே சென்று தோனியின் மனைவியுடன் செல்ஃபி எடுத்தார்.மேலும், தோனி நாட்டின் தலைவராக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.