புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தீவிரவாதி களை தயார்படுத்திய லஷ்கர்-அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் ஹபிஸ் அப்துல் சலாம் புட்டாவி. இவர் லஷ்கர் அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஆட்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை 20 ஆண்டுகளாக செய்து வந்தார் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு மத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லஷ்கர் மையத்தின் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். லஷ்கர் அமைப்பின் துணைத் தலைவராகவும் இவர் இருந்தார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு இவரை தீவிரவாதியாக அறிவித்தது. தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், இவருக்கு 16.5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சிறையில் இருந்து வந்த புட்டாவி (78), நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.