மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன்.
இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய தற்போதைய காலகட்டத்தில் குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பில் ஹரி சாதனை செய்திருப்பது போற்றத்தக்கதாகும்.
மருத்துவர் ஹரி தேர்ந்த மருத்துவராக தமிழ்நாட்டின் மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு தனது மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்றும் அவரது மேற்படிப்பு முயற்சிகளில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.