சென்னை: சென்னையில் சில பகுதிகளில் நிலுவை தொகையை செலுத்ததாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனம், நிலுவை தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் அண்ணாநகரில் உள்ள கைலாஷ் காலனி, தியாகராய நகரில் உள்ள மோதிலால் தெரு மற்றும் பல பகுதிகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால்ஆத்திரமடைந்த மக்கள், மெட்ரோவாட்டர் நிலுவைத் தொகையைப் பெற வேறு வழியை கையாள வேண்டும் என்றும், சரியான நேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்தியவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுத் துறைகள் மெட்ரோவாட்டருக்கு 120 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ள நிலையில, சிறு நுகர்வோரை குறிவைப்பது நியாயமற்றது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.
தியாகராய நகர் மோதிலால் தெருவில் உள்ள ஸ்ரீ பாக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 28 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு உரிமையாளர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் நோட்டிஸ் அனுப்பியது. அத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரை தொடர்பு கொண்டது. ஆனால் ஒரு வாரத்திற்கு பின்பும் குடிநீர் பாக்கியை அவர் செலுத்தவில்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளின் மொத்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இதனால் அனைத்து குடும்பத்தினரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தி நகரில் உள்ள ஒரு குடியிருப்போர் நலச் சங்கத்தின் உறுப்பினர் வி எஸ் ஜெயராமன் கூறுகையில், மார்ச் 31, 2023 நிலவரப்படி, மாநில அரசுத் துறைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மெட்ரோவாட்டருக்கு கட்டணம்/வரியாக 126.71 கோடி செலுத்த வேண்டியிருக்கும் போது, குடிமக்களைத் தண்டிக்க எந்த காரணமும் இல்லை .
சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் . குடியிருப்பு-நுகர்வோர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும்போது, அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வாரியம் தண்ணீர் இணைப்பைத் துண்டிக்கிறது.
சமீபத்திய வழக்கில், பல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஒரு குடியிருப்பில், ஒரு குடியிருப்பாளர் பணம் செலுத்தாததால், அது தண்ணீர் இணைப்பை துண்டித்தது. இத்தகைய நிர்ப்பந்த நடவடிக்கையால் கட்டணம்/வரி செலுத்தியவர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது,” என்றார்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோவாட்டர் அதிகாரிகளை பிரபல ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டது. அதற்கு அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் பாக்கி செலுத்ததா அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம். உரிய நடைமுறைகளை பின்பற்றுகிறோம். றிப்பிடப்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளிலும், பணம் பெறப்பட்ட பிறகு, நாங்கள் அவர்களின் இணைப்புகளை அரை நாளில் சரி செய்து கொடுத்துவிட்டோம்” இவ்வாறு கூறினார்.