`தோனி ஜிக்கு வாழ்த்துகள்; நீதிக்கான எங்கள் போராட்டம் தொடரும்!' – மல்யுத்த வீரர் சாக்க்ஷி மாலிக்

ஒருபுறம் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கான நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு புறம் பெருந்திரளான மக்கள் கூட்டம் ஐ.பி.எல் பக்கம் திசை திரும்பியிருந்தது. ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றியைப் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சாக்க்ஷி மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, தங்களுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

கைது செய்யப்படும் வீராங்கனைகள்

அதில், `தோனி ஜி மற்றும் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துகள். சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதையும், அன்பும் கிடைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஒரு மைனர் சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. மல்யுத்த வீரர்கள் டெல்லி சாலையில் போராட்டத்தில் இறங்கினர். நியாயம் கிடைக்காத நிலையில், புதிய நாடாளுமன்றம் நோக்கிப் போராட்டத்தை முன்னெடுத்த வீராங்கனைகள் காவல்துறையால் நடத்தப்பட்ட விதம் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. துன்பத்தில் வீராங்கனைகள் உழன்று கொண்டிருக்கும் வேளையிலும் அவர்களது புகைப்படங்களை மார்ஃபிங் செய்தது ஒரு கும்பல்.

மனமுடைந்த வீராங்கனைகள் போராடி நாட்டிற்குப் பெருமை சேர்த்த பதக்கங்களைக் கங்கை ஆற்றில் தூக்கி எறிவதாகக் கூறியிருந்தனர்.

`இந்தப் பதக்கங்கள் எங்களது உயிர் மற்றும் ஆன்மா. புனித கங்கைக்கு நிகரான தூய்மையுடன் இந்தப் பதக்கங்களை வென்றுள்ளோம். இந்தப் பதக்கங்கள் முழு நாட்டிற்கும் புனிதமானவை, மேலும் அவற்றை புனித கங்கையில் வைத்திருப்பதை விடச் சிறந்த இடம் இருக்க முடியாது. அதன் பிறகு வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே இந்தியா கேட் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டனர். 

மல்யுத்த வீராங்கனைகள்

கங்கையில் வீராங்கனைகள் பதக்கங்களை வீசத் தயாரானபோது மக்களும், விவசாயச் சங்கத் தலைவர்களும் அவர்களைத் தடுத்து ஐந்து நாள்களில் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பதக்கங்களை வீசலாம் என ஆற்றுப்படுத்தினர். இந்தியா கேட், போராட்டத்திற்கான இடமல்ல என மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ரித்திகா சிங்க் போன்ற திரைத்துறை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்துள்ளனர். கூடிய விரைவில் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு கண்டும் காணாது வாய்மூடி இருக்கிறது.

அரசு எத்தனை நாள்களுக்கு அமைதி காக்கும் என பார்ப்போம். பாலியல் குற்றச்சாட்டுகளில் மல்யுத்த வீராங்கனைகளுக்கே இந்த நிலையெனில், சாமான்யப் பெண்களின் நிலை என்ன?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.