மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் எப்போது நடைபயணம் செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஜூலை 9 முதல் நடைபயணம் செல்லப்போவதாக கூறினார்.
நடைபயணம் தொடங்கும் முன்பாக முறைப்படி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்போம். நடைபயணம் தொடங்கும் நாள் கடைசி நாள் எங்கெங்கு எல்லாம் நடைபயணம் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறுவோம். தேசிய தலைவர்களும் இந்த நடைபயணத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பழனிவேல் தியாகராஜன் துறையை மாற்றியது மதுரைக்கு செய்த துரோகம் என்றும் தெரிவித்தார். குற்றம் சுமத்துவது யார் வேண்டுமானாலும் சுமத்தலாம். பிடிஆர் எந்த சந்தர்ப்பத்திலும் தவறாக கூறவில்லை. பிடிஆரை வீசி விட்டு சென்று விட்டால் திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் எதுவும் நடக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
பழனிவேல் தியாகராஜன் பாராம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் முதல்வர் குடும்பத்தை பற்றி குற்றம் சுமத்தி விட்டார் என்பதற்காக அவரது துறையை மாற்றியது மதுரை மக்களுக்கு செய்த மபெரும் துரோகமாக பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது வெட்கட்கேடான விசயம். காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் அளவிற்கு அதிகாரிகளை தாக்கியுள்ளனர். கரூரில் உள்ள துணை மேயர், கவுன்சிலர்கள் பலரும் வெட்கக்கேடான செயலை செய்து உள்ளனர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பலரும் இந்த செயலை செய்துள்ளனர்.
மக்கள் பிரஜையாக இருப்பவர்களே வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இப்படி நடந்து கொண்டிருப்பது சரியல்ல.
ரவுடிகளை வேட்பாளர்களாக நிறுத்தி ஜெயிக்க வைத்து ரவுடியிஷம் செய்வதுதான் திமுக மாடல் அரசின் செயல்பாடு. இது வருமான வரித்துறைக்கு விடுத்த சவால்.
அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது வருத்தப்படக்கூடிய விசயம்தான். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்வித்தரம் சரியில்லை. அமைச்சர் பொன்முடிக்கே சில விசயங்கள் தெரியவில்லை.