சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அநாகரிமாக மெசேஜ் அனுப்பியதாக முதல் நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை செம்பியம் பகுதியில் வசிக்கும் ஒருவர் இடப்பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்த போது, அவரது செல்போன் எண்ணை அங்கு பணிபுரியும் முதல் நிலை காவலர் வினோத்குமார் வாங்கி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு முதல்நிலை காவலர் வினோத்குமார் அநாகரீகமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவருடன் வினோத்குமார் தொடர்ந்து செல்போனில் சாட்டிங் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டிற்கு வரும்படி அந்த பெண்ணின் செல்போனில் இருநது முதல்நிலை காவலர் வினோத்குமாருக்கு மெசேஜ் வந்துள்ளது.
உடனே வினோத்குமார் சென்று புறப்பட்டு பார்த்த போது, வீட்டில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் நண்பர் ஆகியோர் இருந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தெரியாமல் கணவரே மெசேஜ் அனுப்பி தன்னை வரவழைத்திருப்பது தெரியவந்ததும் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரில் முதல் நிலை காவலர் வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து, சென்னை புளியந்தோப்பு சரக துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அநாகரிமாக மெசேஜ் அனுப்பியதாக காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.