சான் ஃபிரான்சிஸ்கோ: இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, “பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதானால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவில் அரசியல் ரீதியாக செயல்படுவது ஏதோ ஒருவகையில் கடினாமாகி விட்டது. அதன் காரணமாகவே, நாட்டின் தெற்குமூலையான கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயணம் மேற்கொள்வது என்று தீர்மானித்தேன். வரலாற்றைப் படிக்கும்போது, குருநானக் தேவ், குரு பசவண்ணா, நாராயண குரு போன்ற மதத்தலைவர்கள் அனைவருமே தேசத்தை ஒரே மாதிரி ஒருங்கிணைத்தை அறியமுடியும்.
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எனக்கு ஒன்று புரிந்தது. பாஜகவுக்கு உதவுவதற்காக ஊடகங்கள் சில விஷயங்களை எடுத்துக்காட்ட முயல்வது தெரிந்தது. எனவே, ஊடகங்களில் காட்டப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிட வேண்டாம். இந்தியா என்பது ஊடகங்களால் காட்டப்படுவது மட்டும் இல்லை. ஊடகங்கள் ஒருகுறிப்பிட்ட கதையைக் கட்டமைக்க விரும்புகின்றன. அவை இந்தியாவில் நடைமுறையில் இல்லாத கதையை கட்டமைக்க விரும்புகின்றன” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவின் மூன்று நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று(செவ்வாய்க்கிழமை) அந்நாட்டிற்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் குறித்து, இந்திய வெளிநாட்டுவாழ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா கடந்த வாரம் கூறுகையில், “ராகுல் காந்தியின் அமெரிக்க வருகையின் நோக்கம், ‘உண்மையான ஜனநாகம்’ குறித்த பார்வைகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களிடம் ராகுல் காந்தி உரையாடுவார்” என்று தெரிவித்திருந்தார்.