ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சிறப்பாக இந்த ஆண்டு ஐபிஎல்லை முடித்து வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை கோப்பையை வென்ற அளவுக்குப் போட்டிக்குப் பிறகு தோனி பேசியதும் வைரலானது. “ரசிகர்கள் என் மீது காண்பித்த அன்பிற்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்.” எனக் கூறியிருந்தார் தோனி. தோனியுடனான உரையாடல் குறித்து Cricbuzz தளத்தில் பேசும்போது மனம் திறந்திருக்கிறார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே.
“இந்த ஆண்டு மூன்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்களில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி சேப்பாக்கில் நடந்த போட்டி ஒன்றில் எங்களால் பேசவே தொடங்கமுடிய வில்லை. அவர்களின் ‘தல’ என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அங்கிருந்து யாருமே கிளம்புவதாக இல்லை. இத்தனை ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ரோஹித், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ்; விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் எனப் பல சிறப்பான வீரர், ரசிக பந்தங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி – சிஎஸ்கே ரசிகர்களிடையேயான பந்தம் ஈடு இணையற்றது. அவர் திரையில் தோன்றினாலே மைதானம் பற்றிக்கொள்கிறது.”
இறுதிப்போட்டியில் அவருடன் உரையாடுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவுடன் கூலாகப் பேசிக்கொண்டிருந்தார் தோனி. அவரிடம் சென்று, ‘கடைசியாக கோப்பை வென்றபோது, உங்கள் லெகசி பற்றிக் கேட்டேன். அதிலிருந்தே இன்றும் தொடங்கவா?’ என்று கேட்டேன். ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். என்னிடம் பதில் தயாராக இருக்கிறது’ என்றார். அடுத்த பத்து நிமிடங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது அதுதான். ‘ஓய்வு பெறுவதை அறிவிக்கப்போகிறாரா, இல்லை வேறு எதுவும் சொல்லப் போகிறாரா’ எனப் பல எண்ணங்கள் அலையடித்தன. மற்றவர்களை பேட்டிகாணும் போதும் அதையேதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் காத்திருந்த உரையாடலும் தொடங்கியது. ‘எல்லாம் இங்கு அகமதாபாத்தில்தான் தொடங்கியது, ரசிகர்கள் அன்பால் கலங்கி டக்-அவுட்டில் அமர்ந்திருந்தேன்’ என அவர் சொன்னார். இதுவரை களத்தில் எமோஷன்களை பெரிதும் வெளிக்காட்டாத மனிதன் அப்படிக் கண்ணீர் சிந்தினார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? பிரசன்டேஷனுக்குப் பிறகும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். சிஎஸ்கே அவருக்கு எவ்வளவு நெருக்கமானது, ரசிகர்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற அவரது ஆசை என அனைத்தும் புரிந்தது. அதற்குப் பிறகு மொத்த மைதானத்தையும் சுற்றிவந்து களையாமல் காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார்.
தோனியுடன் உரையாடுவது ஏன் ஸ்பெஷலாக இருக்கிறது எனப் பலரும் கேட்பார்கள். உண்மையில் அது ஏன் எனக் குறிப்பிட்டுச் சொல்ல என்னிடம் காரணங்கள் இல்லை. தானாக முன்வந்து விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவரது குணம் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதும் அவருடன் உரையாடுவது பெரிய மகிழ்ச்சியை எனக்குத் தரும். அவர் ஓய்வுபெறும் போது அதை ரொம்பவே மிஸ் செய்யப்போகிறேன்!” என்றார் ஹர்ஷா போக்லே.