ஹைதராபாத்:
“இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருகிறது.. உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கள் ஸ்டிரைக் (துல்லியத் தாக்குதல்) நடத்திக் காட்டுங்க பார்ப்போம்” என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.
பாஜகவை சித்தாந்த ரீதியாக மூர்க்கத்தனமாக எதிர்க்கும் சில அரசியல் கட்சிகளுள் ஒன்றாக ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி விளங்குகிறது. முதலில் தெலங்கானாவில் மட்டுமே அரசியல் செய்து வந்த ஒவைசி, தற்போது பாஜக எந்த மாநிலத்தில் போட்டியிட்டாலும் அங்கு சென்று போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இவ்வாறு போட்டியிடுவதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பல நேரங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி விடுகிறது. இதனால் மஜ்லிஸ் கட்சி, சமீபகாலமாக பாஜவின் B Team என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாசுதீன் ஒவைசி பாஜகவை கடுமையாக சாடி பேசினார். அவர் பேசியதாவது:
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் என்ன கூறினார் என நினைவு இருக்கிறதா? ஹைதராபாத்தில் உள்ள ரோஹிங்கியா, பாகிஸ்தானி, ஆப்கானிஸ்தானி மக்களின் ஓட்டுகளை வைத்து நான் ஜெயிக்க நினைக்கிறேன் என அவர் கூறினார். இங்குள்ள முஸ்லிம் மக்களைதான் அவர் பாகிஸ்தானி என்றும், ஆப்கானிஸ்தானி எனவும் கூறுகிறார். மேலும், பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்தில் துல்லியத் தாக்குதல் நடக்கும் எனவும் அவர் கூறினார்.
நான் கேட்கிறேன். ஹைதராபாத் மீது துல்லியத் தாக்குதல் நடத்துவேன் எனக் கூறுகிறீர்களே. சீனா தான் இந்தியாவை எப்போதுமி சீண்டி வருகிறது. மத்திய அரசுக்கு துணிச்சல் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தட்டும் பார்க்கலாம். இவ்வாறு ஒவைசி பேசினார்.