புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகளவில் ஒரு இடத்தை பெற்று, ஆசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறி உள்ளது என பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2013ல் நாம் பார்த்ததை விட தற்போதைய இந்தியா முற்றிலும் மாறுபட்டது. 10 ஆண்டு கால குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளுடன் உலகளவில் இந்தியா ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு குறைவான ஆண்டுகளிலேயே இந்தியா மாற்றம் கண்டுள்ளது.
ஜிடிபிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு மற்றும் மூலதன செலவு அதிகரித்து வருகிறது.
ஆசியா மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும். இந்தியா மீதான விமர்சனங்களை, 2014க்கு பிறகான மாற்றங்களை அதனை புறக்கணிக்கிறது.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, கார்பரேட் வரியை சக நிறுவனங்களுக்கு இணையாக கொண்டு வருதல், உள்கட்டமைப்பில் முதலீடு, ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனையானது,ஜிடிபிக்கு ஏற்ப அதிகரித்து வருவது, பயனாளர்களுக்கு நேரடியாக மானியம் செலுத்துவது, திவால் சட்டம், நெகிழ்வான பணவீக்க இலக்கு, எப்டிஐயில் கவனம், கார்பரேட் லாபத்திற்கான அரசு ஆதரவு, ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய சட்டம் என புதிய மாற்றங்களை மோடி அரசு செய்துள்ளது.
இந்தியாவின் கொள்கை தேர்வு மற்றும் பொருளாதாரம் , சந்தைக்கான தாக்கங்கள் ஆகியவையே இந்த மாற்றங்களுக்கு காரணம்.
2031 ல் இந்தியாவின் ஏற்றுமதி சந்தை மதிப்பு 2 மடங்கு அதிகரிக்கும்.
டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியா சர்வதேச தலைவராக விளங்கும். பணவீக்கம் என்பது பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், குறைந்த நிலையற்றதாகவும் இருக்கும்.
இந்தியப் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. இது எதிர்காலத்திற்கு சாதகமாக உள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு மற்றும் பணவீக்கத்தை உறுதியாக கவனித்து சரி செய்தல் ஆகியவற்றில் இந்தியா வலுவான வெற்றியை பெறலாம்.
இந்தியாவில் தனி நபர் வருமானம் தற்போது 2,200 அமெரிக்க டாலர் ஆக உள்ளது, 2032ல் 5,200 டாலர் ஆக அதிகரிக்கும்.
இந்தியாவின் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சியால் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் ஊக்கமளிக்கும் என நம்புகிறோம். உலகளாவிய மூலதனச் சந்தையை நம்பி இருப்பதை இந்தியா குறைத்துள்ளது. இதனால், அமெரிக்க மந்தநிலை மற்றும் அமெரிக்க பெடரல் வட்டி விகித மாற்றங்கள் பெரிய அளவில் இந்திய சந்தையை பாதிக்காது. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சிறப்பான நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்