இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாளை கடற்கரை பகுதிக்கு வந்த பைபர் படகு ஒன்றை சுற்றி வளைத்த அவர்கள், அதில் மறைத்து வைத்திருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோவுக்கும் அதிகமான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடத்தில் ஈடுபட்ட 2 பேரை அவர்கள் கைது செய்தனர்.
கைதான சாதிக் அலி என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம், மண்டபம் நோக்கி வந்த பைபர் படகு ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த சிலர் 2 பார்சல்களை கொடுத்து அனுப்பியதாகவும், அதிகாரிகளைக் கண்டதும் அவற்றை மணாலி தீவு பகுதியில் தூக்கி வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில், சங்கு எடுக்கும் மீனவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் கடலில் தங்கத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.