புதுடெல்லி: “என் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை நானே தூக்கிட்டுக் கொள்வேன்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் எனக் கூறி உணர்ச்சிபூர்வ நாடகத்தை அவர்கள் (மல்யுத்த வீராங்கனைகள்) நடத்துகிறார்கள். என் மீது குற்றச்சாட்டுபவர்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள், உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதால் நான் தூக்கிட்டுக்கொள்ள மாட்டேன். உங்களிடம் ஆதாரம் இருந்தால் போலீஸாரிடம் கொடுங்கள். நான் தவறு செய்ததற்கான ஆதாரங்களை முன்வைத்தால் நீதிமன்றத்தின் தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன். என் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தூக்கிட்டுக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
புகாரும் போராட்டமும்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் நேற்று மாலை 6 மணியளவில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பல ஆண்டு கடின உழைப்புக்கு பின்வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்கவேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.
சர்வதேச விளையாட்டு அமைப்புகள் கண்டிப்பு: “குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் முறையான விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். கடந்த சில நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கையாளப்படும் விதம் கவலை அளிக்கிறது. தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக பேரணி சென்ற அவர்களை போலீஸார் கைது செய்தது கவலை தருகிறது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அவர்கள் போராடி வந்த இடமும் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் கூட்டமைப்பை ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யும். அதன் பின்னர் வீரர்கள் தனி கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என்று ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட கண்டனத் தகவலில், “உள்நாட்டு சட்டத்துக்கு ஏற்ப இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான விசாரணை முதல் கட்டத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். இந்த நடைமுறைகளின்போது மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், இந்திய விளையாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் போராட்டம் மேற்கொண்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.