சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை: புதுச்சேரி அமைச்சர் விளக்கம்

புதுச்சேரி: “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை; அவரவர் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம்” என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9 வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) முதல் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு எதிரொலியாக, வரும் 7-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களுருவில் இருந்து சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் தபால் துறை வாகனம் மூலம் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு வந்து இறங்கியுள்ளன.

இந்தப் புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாகவே அனுப்பும் பணி தொடங்கியது. இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: ”சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் இன்றில் இருந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட இருக்கிறது. அதுபோல் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தந்த பகுதிகளில் இருந்து புத்தகங்கள் விநியோகிக்கப்படும். சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்வர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம். இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும். இது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.