இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதிலும் தொழில்நுட்பத்தின் இன்றைய நவீன பரிணாமமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாகவும், சில இடங்களில் அவர்களுக்கும் மேலாகவும் கோலோச்ச தொடங்கியிருக்கிறது.
அதிலும் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனிதர்களுக்கு உதவிகரமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு மனிதர்களுக்கு எதிராகவும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல துறைகளில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பிருதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், டென்மார்க் நாட்டின் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து ChatGPT தயார் செய்துகொடுத்த உரையை பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) நேற்று வாசித்திருக்கிறார்.
அந்த உரையின்போது, “இப்போது நான் இங்கு படிப்பது என்னுள்ளிருந்து வருவது அல்ல. பிறர் தயார் செய்துகொடுத்த உரையும் அல்ல. இது ChatGPT-யால் தயார்செய்யப்பட்ட உரை. அரசின் வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் அறிக்கை தொடர்பான விஷயங்களில் நாம் எதிர்பார்க்குமளவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லையென்றாலும்கூட, அது வெளிப்படுத்தும் முடிவுகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கின்றன” என்றார் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன்.