புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006-ல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ‘கன்ய விவாஹ் யோஜ்னா’ எனும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.
இதன்படி, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருடந்தோறும் ஏழைப் பெண் களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ரூ.55,000 தொகையும் அளிக்கப்படும் இத்திட்டத்தில் சமீப ஆண்டுகளாக சர்ச்சைகள் கிளம்பி விட்டன.
தற்போது, ஜாபுவா மாவட்டத்தின் தண்ட்லாவில் 296 பெண்களுக்கு இலவச திருமணத்தை அரசு நடத்தியது. அப்போது புதுமணத் தம்பதிகளுக்கு பரிசுப்பெட்டி வழங்கப்பட்டது. வழக்கமாக அழகுசாதனப் பொருட்கள் வைக்கப்படும் இப்பெட்டியில் கூடுதலாக கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இந்த இலவச திருமணங்களை நடத்தும் மாநில சமூக நலத்துறையின் அதிகாரி பூர்சிங் ராவத் கூறும்போது, “இலவச திருமண தம்பதிகளுக்கான பரிசுப் பொருட்களை இம்முறை நமது சுகாதாரத் துறை அளித்தது.
குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு குறித்த அவர்களின் புதிய திட்டம் காரணமாக கருத்தடை மாத்திரைகளும் ஆணுறைகளும் அதில் சேர்க்கப்பட்டுவிட்டன. பரிசுப் பெட்டிகளை பெறும் தம்பதிகள் மட்டுமே அதனை திறக்கும் வகையில் இருந்ததால் அதை நாங்கள் திறக்காமலேயே விநியோகித்திருந்தோம்” என்றார்.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 23-ல் ம.பி.யின் திந்தோரியில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன. இதில் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் பலன் அடைவதை தடுப்பதற்காக மணப்பெண்களுக்கு, முன்னதாக கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்பட்டது சர்ச்சையானது.
எனினும் இந்த சோதனையில் 5 பெண்கள் கர்ப்பம் தரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இல்லாமல் முதன்முறையாக செய்யப்பட்ட இந்த பரிசோதனையால் ம.பி. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது நினைவுகூரத்தக்கது.