சென்னை: கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஏஆர் முருகதாஸ்.
அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் விரக்தியில் உள்ளார்.
சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரில் ஒருவரின் படத்தை இயக்கலாம் என செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் போனதால் மீண்டும் பாலிவுட் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் பாலிவுட் செல்லும் ஏஆர் முருகதாஸ்: எஸ்ஜே சூர்யாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து இயக்குநராக தடம் பதித்தவர் ஏஆர் முருகதாஸ். முதல் படமான தீனாவில் அஜித்துடன் இணைந்த ஏஆர் முருகதாஸ், அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.
இதனால் ஏஆர் முருகதாஸின் மார்க்கெட் வேற லெவலில் இருந்தது. இன்னொரு பக்கம் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின் படத்தையும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் கஜினி இந்தி ரீமேக்கையும் எடுத்து மிரள வைத்தார். ஏஆர் முருகதாஸின் மேக்கிங் ஸ்டைல் பார்த்து விஜய் துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
இறுதியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பிளாப் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கியது. அதேநேரம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் படத்தை இயக்கவிருந்த ஏஆர் முருகதாஸ் அதிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது தொடங்கிய பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவே இல்லை.
இதெல்லாம் போதாதென்று ஏஆர் முருகதாஸ் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. ஆனாலும் அவர் மீண்டும் தமிழில் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக சிவகார்த்திகேயன், சிம்பு இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஏஆர் முருகதாஸ். இருவருக்குமே தரமான ஸ்கிரிப்ட் ரெடியாக இருப்பதாகவும், அதில் ஒன்று சூப்பர் மேன் கதைக்களத்தில் உருவாகும் படம் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால், சிவகார்த்திகேயன், சிம்பு இருவருமே அடுத்தடுத்து வேறு இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகிவிட்டதால் ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராம் ஏஆர் முருகதாஸ். ஏற்கனவே ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு அனிமேஷன் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், எதுவுமே கை கூடாத விரக்தி, கோலிவுட் ஹீரோக்களும் கண்டுகொள்ளவில்லை என்பதால் தனது முடிவை மாற்றியுள்ளாராம் ஏஆர் முருகதாஸ்.
அதன்படி, அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹிட் அடித்த சல்மான் கான் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் பிளான் செய்துள்ளாராம். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.