சென்னை: கடலோர கவிதைகள், புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா 20 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார்.
நடிகை ரேகா லீடு ரோலில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக போடப்பட்டுள்ளது.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ரேகா நடிக்க உள்ள இந்த படத்தில் அனிதா சம்பத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர கவிதைகள் ரேகா: பாரதிராஜா இயக்கத்தில் 1986ம் ஆண்டு சத்யராஜ் சின்னப்பதாஸ் ஆக நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை ரேகா.
அதே கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் ஓபனிங் சீனில் கமலின் காதலியாக வந்து பரிதாபமாக அந்த மலையின் உச்சியில் இருந்து விழுந்து இவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்து விடுவாரே அந்த ரேகா தொடர்ந்து தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.
பிக் பாஸ் சீசன் 4ல்: கமல்ஹாசன் உடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்த ரேகா எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட பல படங்களில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வயதான நிலையில், ரோஜா கூட்டம் படத்தில் பூமிகாவின் அம்மாவாக எல்லாம் நடித்த ரேகா பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அதி விரைவாகவே வெளியேறிய அவருக்கு சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்கள் அமைந்தன. பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மாவாகவும் நடித்து அசத்தினார்.
மீண்டும் கதையின் நாயகியாக: இந்நிலையில், அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக.. அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்றுள்ளன.