ஸ்டாக்ஹோல்ம் தினசரி புகைபிடித்தல் சதவீதம் குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் மாறுகிறது.
புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை இல்லா தினம் கடைப்பிடிப்படுகிறது. இந்த ஆண்டில், ‘உணவை அதிகரியுங்கள்; புகையிலையை அல்ல’ என்ற கருத்து பரப்பப்படுகிறது.
இந்நிலையில், ஸ்வீடனில் தினசரி புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக அது விரைவில் மாற உள்ளது.
புகைபிடிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே புகைப்பிடிக்கின்றனர்.
இது, கடந்த ஆண்டு 5.6 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் குறைந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன், மொத்த மக்கள்தொகையில், புகைப்பிடிப்பவர்களின் சதவீதம் 20ஆக இருந்த நிலையில், தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது.
புகைபிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு, இளைஞர்கள் மத்தியில் அதிகளவு இருப்பதே இதற்குக் காரணம்’ என ஸ்வீடன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு புகைபிடிப்பதை கட்டுப்படுத்த அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்வீடன் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த உல்ரிகா கூறுகையில், ”முதலில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ஏற்படுத்தப்பட்டது.
”படிப்படியாக பள்ளி மைதானங்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதும், அது பயன்பாட்டில் இல்லாததற்கு முக்கிய காரணமாகும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்