வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பணமோசடி.!!
சென்னையில் உள்ள பழைய வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் தியா சுபபிரியா மகள் ரிதமீனா. இவர் வெளிநாட்டில் மருத்துவ படிக்க ஆசைப்பட்டுள்ளார். இவர்களிடம் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு இருப்பதாக கூறி பிரவீன் மற்றும் சதீஷ் ஜனார்தனன் உள்ளிட்டோர் அறிமுகமாகியுள்ளனர்.
இவர்கள் மூலமாக மேலும் இரண்டு பேர் ரிதமீனாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி அங்கு மருத்துவ சீட் பெறுவதற்காக ரூ.21 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, கடந்த ஆண்டு மருத்துவ சீட்டை உறுதிப்படுத்தி சேர்க்கை செய்துள்ளனர்.
இருப்பினும், கொரோனாவை காரணம் காட்டி ரிதமீனாவை மருத்துவம் முதலாமாண்டு படிப்பை இங்கிருந்தே படிக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் இரண்டாம் ஆண்டு படிப்பதற்காக வெளிநாட்டிற்குச் சென்று பார்த்த போது, அங்கு அந்த பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்பதும், சிறிய அளவில் ஒரு கட்டிடம் ஒன்றில் கல்லூரி செயல்படுவது போல் போலியாக ஏற்பாடு செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ரிதமீனா குடும்பத்தினர் இதேபோல், வேறு எந்த மாணவியும் ஏமாறக் கூடாது என்பதற்காக சம்பவம் குறித்து அந்த நாட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.