சென்னை : ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சனைகள் தொடர்வதால், 3வது நாளாக இன்றும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 6 மணி வரை பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் மூன்றாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பால் வரத்து குறைவின் காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
6 மணி வரை பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வெகு தாமதமாகக் கிளம்பின.
தென் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு, பால் கேன்கள் தட்டுப்பாடு, பால் பாக்கெட் டப்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “வருகின்ற காலகட்டங்களில் நிச்சயமாக ஆவின் நிறுவனம் மேலும் சிறப்பாக செயல்பட்டு அனைத்தும் முயற்சிகளையும் தீர்க்கமாக நடைமுறைப்படுத்துவோம். பால் எந்தவித தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.
சிறிய அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கக்கூடிய இடத்தில் பிரச்சனைகள் இருக்கின்றது. பால் கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.