சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை திடீரென டபுள் மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட சைவ உணவுகளிலும், அசைவ உணவுகளிலும் தக்காளி தவிர்க்க முடியாத பொருள். ஆனால், தக்காளி விலை எல்லா காலங்களிலுமே நிலையற்றது. உற்பத்தியைப் பொறுத்து விலையும் சர்ரென இறங்கும், திடீரென கடுமையாக விலை உயரும். எளிதில் அழுகக்கூடியது, சேதமடையக்கூடியது என்பதால் தக்காளி விலை அன்றாடம் மாறுபடுகிறது.
கடந்த சில வாரங்களாக தக்காளி மகசூல் வெகுவாக அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. பெரிய சந்தைகளில் மொத்த விலையில் ரூ.5க்கும் தக்காளி விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் தக்காளி மகசூல் 75 சதவீதம் குறைந்தது. மேலும், தக்காளி அதிகம் பயிரிடப்பட்டுள்ள பகுதியில் பெய்த மழையால், வயல்களில் உள்ள செடிகளில் தக்காளி அழுகி வருகிறது.
அதேநேரத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது. தக்காளி விலை திடீரென இருமடங்கு உயர்ந்து விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது முகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் மொத்த வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. முகூர்த்த தினங்கள் முடிந்த பிறகு தக்காளி விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.