ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார் மாநில முதல்வர் அசோக் கெலாட்.
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த ல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த 5 ஆண்டுகளாகவே மூத்த காங்கிரஸ் தலைவர் தலைவர் சச்சின் பைலட்டுடன் மல்லுக்கட்டியே ஆட்சியை நகர்த்திக் கொண்டிருக்கிறார். சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போதும் டெல்லி மேலிடத்தின் ஆதரவுடன் அசோக் கெலாட் நிலைமைகளை சமாளித்தார்.
அண்மையில் கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களிலும் அதே பாணி வெற்றியை அறுவடை செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இதனால் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவர்களையும் டெல்லிக்கு வரவழைத்து அனைத்து தலைவர்களிடையேயும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு கை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை இப்போதே அமல்படுத்த தொடங்கி இருக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். இதன் முதல் கட்டமாக, மாநிலத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் அசோக் கெலாட். 200 யூனிட் வரையிலான மின்சாரம் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை; அத்துடன் இதர கட்டணங்களையும் அரசே தள்ளுபடி செய்யும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ராஜஸ்தானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.