சுனில் கனுகோலு: இனிமே இவர் தான் நம்பர் ஒன்… காங்கிரஸ் வியூகமும், சித்தராமையா முடிவும்!

பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக நிபுணர் பணிக்கு ஓய்வு அளித்து விட்ட நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருப்பவர் தான் சுனில் கனுகோலு. கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் எனக் கூறப்படுகிறது. மிகவும் அமைதியானவர். வேலை என்று வந்துவிட்டால் உரிய தரவுகளுடன் தரமான சம்பவங்கள் அரங்கேற்றுபவர்.

சுனில் கனுகோலு

பெரிதாக வெளியில் தெரியாத நபர். எப்போதும் கள நிலவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை கைகளில் வைத்திருப்பார். முன்னதாக இவரை தனது உறுப்பினராக
காங்கிரஸ்
கட்சி மாற்றி பலமான அடித்தளம் போட்டுக் கொண்டது. கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சிக்கு எதிராக ‘PayCM’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து புதுமையான முறையில் மக்கள் கவனத்தை ஈர்த்தவர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்

ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்க சுனில் கனுகோலு வகுத்து கொடுத்த வியூகங்கள் பெரிதும் கைகொடுத்தன. மேலும் பொதுமக்களுடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சியால் முடிந்தது. இவரும், விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலும் சேர்ந்து கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக வார் ரூம் அமைத்து செய்த வேலைகள் பேசுபொருளாக மாறின.

காங்கிரஸ் அமோக வெற்றி

இதற்கு பரிசாக மாபெரும் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 135 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை உடன் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலு நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது பணிகள் என்னென்ன என்பது பற்றி எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

பாஜகவிற்கும் களப்பணி

கனுகோலு பாஜகவிற்காகவும் வேலை செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்து பாஜகவை அரியணையில் ஏற்றியது கவனிக்கத்தக்கது. திமுக, ஷிரோன்மனி அகாலி தள் ஆகிய கட்சிகளுக்கும் வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோருக்கு மாற்று

அதற்கு முன்பு 2014 மக்களவை தேர்தலின் போது பிரசாந்த் கிஷோருடன் இணைந்து நரேந்திர மோடிக்கான தேர்தல் வியூகம் வகுத்து மத்தியில் பாஜக ஆட்சியை மலர செய்ததில் முக்கிய பங்காற்றினார். தற்போது முழுமையான காங்கிரஸ்வாதியாக மாறிவிட்டார் சுனில்.

ராகுலின் ஒற்றுமை பயணம்

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரைக்கு திட்டம் வகுத்து கொடுத்தது சுனில் தான் கூறுகின்றனர். இந்த யாத்திரை தேசிய அளவில் கவனம் ஈர்த்தது மட்டுமின்றி, ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செல்வாக்கை உயர்த்தி காட்டியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.