சென்னை:
ரயில் பயணத்தின் போது நமது செல்போன் தவறி வெளியே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். எந்தவித பதட்டமும் இல்லாமல் சிம்பிளான சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். நமது செல்போன் நம் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.
இன்றைய நவீன உலகத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ தொடங்கிவிட்டது. ஒரு கம்ப்யூட்டரை போல பல தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும் என்பதால் அலுவல் ரீதியான சில ஆவணங்கள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை பல தரவுகளை செல்போனில்தான் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட சூழலில் செல்போன் தவறுவது என்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
செல்போன் திருடுபோனாலோ அல்லது தவறவிட்டு விட்டாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அத்தியாவசியமான தொடர்புகள் முதற்கொண்டு நமது மிக முக்கியமான தகவல்கள் கூட திருடப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் பதற்றம் அதிகமாகவே இருக்கும்.
இதுபோன்ற சூழலில், ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்துவிட்டால் நமது மனநிலை எப்படி இருக்கும்? அடுத்து என்ன செய்வது என்றே தெரியாத அளவுக்கு நாம் குழம்பிப் போவோம் அல்லவா? சிலர் ரயிலை சங்கிலியை இழுத்து நிறுத்த முயல்வார்கள். ஆனால் அப்படி செய்வது புத்திசாலித்தனம் அல்ல. ஏனெனில் ரயில் உடனடியாக நிற்காது. நிச்சயம் 3 கிலோமீட்டர் தூரம் தாண்டிதான் ரயில் நிற்கும். அத்தனை தூரம் நீங்கள் நடந்து சென்று உங்கள் செல்போனை கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியம். அதுவும் இல்லாமல், ரயில்வே போலீஸார் உங்களுக்கு ஒரு பெரும் தொகையை அபராதமாகவும் விதித்து விடுவார்கள்.
அப்படியென்றால் என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள். ரொம்பவே ஈஸியான நடைமுறைகளை பின்பற்றினாலே போதும். உங்கள் செல்போன் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டால் உடனே ஜன்னல் வழியே எட்டி பாருங்கள். அப்போது தெரியும் மின் கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் Train tracking app மூலமாக உங்கள் லோக்கேஷனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதையடுத்து, 183 அல்லது 139 என்ற எண்ணை தொடர்புகொண்டு நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்திருந்த மின் கம்பத்தின் நம்பர் மற்றும் உங்கள் விவரங்களை சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே ரயில்வே போலீஸார் நீங்கள் கூறிய இடத்துக்கு சென்று உங்கள் செல்போனை கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள். சூப்பர்ல.