மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும் ரசிகர்களுக்காக வேண்டி இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்தார். இந்தச் சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட உலக நாடுகளில் பெருந்திரளான மக்களின் அன்பை பெற்றவர்கள் அரசியல் களத்திற்கு வருவது வழக்கம். அது விளையாட்டு, சினிமா துறை என நீளும். அதற்கு உதாரணமாக உலக அளவில் அரசியலில் இயங்கி வரும் பிரபலங்கள் பலர் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூட தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றி வருகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்னரும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் பலர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எல்லோரையும் போல மகேந்திர சிங் தோனி மேலும் ஒரு சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதை அறிந்து நான் அக மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அவர் அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். அவர் எதிர்கால தலைவர். அனைவருடனும் இணக்கமாக பணியாற்றும் பண்பு, பணிவு மற்றும் புதிய உள்ளீடுகளை செய்ய விரும்பும் எண்ணமும் கொண்டவர்” என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.