சென்னை: தமிழகத்தில் ஜூன் 7ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
ஆனால், சென்னையில் ஒரு சில தனியார் பள்ளிகளில் இன்று பள்ளிகளை திறந்து மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்விதுறை அறிவுறுத்தி உள்ளது.