திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் சிறிய பிரச்னைக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அதிகமாக பணப்பிரச்னையால்தான் இது போன்ற தம்பதிகளிடையே பிரச்னை ஏற்படுகிறது. மும்பை தாராவி ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்த்கிஷோர் பட்டேல். இவர் காஜல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். காஜல் பெண் குழந்தை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். வளர்ப்பு மகளுக்கு இப்போது 20 வயதாகிறது. காஜலையும், வளர்ப்பு மகளையும் நந்த்கிஷோர் கவனித்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் வளர்ப்பு மகள் மோகினியை தனது சொந்த மகளைப்போல் நந்த்கிஷோர் கவனித்துக்கொண்டார். ஆனால் காஜல் அதிகமாக தனது வளர்ப்பு மகளிடம் அதிக கவனம் செலுத்தியதாக தெரிகிறது. நந்த்கிஷோரை சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் காஜலுக்கு தக்கபாடம் கற்றுக்கொடுக்க நந்த்கிஷோர் முடிவு செய்தார்.
மோகினி வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வேண்டுமென்றே மோகினியுடன் நந்த்கிஷோர் தகராறு செய்தார். இத்தகராறு காரணமாக இருவரும் வீட்டிற்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் வீட்டில் இருந்த மண்ணெணய் எடுத்து மோகினி மீது ஊற்றி நந்த்கிஷோர் தீவைத்துவிட்டார். தீயால் அலறிய மோகினியை அவரது தாயார் காஜலும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தீயை அணைத்து சயான் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மோகினி 70 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருந்த நந்த்கிஷோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மோகினி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.