சனி கோளின் நிலவில் நீர்: உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள்

நியூயார்க்: சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.

விண்வெளி ஆராய்சி அசுர வளர்ச்சியை அடைந்த காலக்கட்டத்தில் இருந்தே பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையொட்டிதான் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிவிப்பில், “நமது சூரிய குடும்பத்தில் உள்ள சனிக் கோளில் அதன் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் ( பனிக்கட்டியிலான நிலவு) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று காணப்படுவதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டே சனிக்கோளின் நிலவுகளில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி இருந்த நிலையில் ஜேம்ஸ் வெப் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும் இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகலாம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் என்செலடஸ் குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, “ என்செலடஸின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். அதே நேரத்தில் நிலவின் மையப்பகுதியில், இந்த தண்ணீரை சூடாக்கும் அளவுக்கு வெப்பம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சனிக் கோளுக்கு 124 நிலவுகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாக பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த, இருப்பதற்கு சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.

பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த முதல் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். 1960-களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர்தான் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 கோடி செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.