பெலகாவி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுமே பயனடையும் எனவும் டிகே சிவகுமார் தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் நீண்டகால முயற்சி. ஆனால் காவிரி நதிநீரை திசை திருப்புகிற கர்நாடகாவில் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்திலும் மேகதாது அணை பிரச்சனை எதிரொலித்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்குவோம் என காங்கிரஸ் அறிவித்தது. முன்னதாக மேகதாது அணை கட்ட வலியுறுத்தி மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் பாதயாத்திரை சென்றிருந்தார்.
தற்போது கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்துவிட்டது. அம்மாநில துணை முதல்வரான டிகே சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிகே சிவகுமார் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோர், கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டிகே சிவகுமார் கூறியதாவது: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பேசி வேண்டுகோள் வைப்போம். மேகதாது அணையால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களும் பயன்படையும். அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கர்நாடகா வாழ் தமிழர்களும் தமிழ்நாடு வாழ் கன்னடர்களும் காவிரி நீரைத்தான் குடிக்கின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ1,000 கோடி இன்னமும் செலவிடப்படவில்லை. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.